வடகொரியா தென்கொரியாவுக்கு இடையில் போர் தொடங்குமா?

Filed under: உலகம் |

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியாவை வடகொரியா அழிக்கப்போவதாக எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைகள், அணு ஆயுத பரிசோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. அவ்வாறாக வடகொரியா சோதிக்கும் ஏவுகணைகள் தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்து அந்த நாடுகளை அச்சுறுத்தியும் வருகின்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தென் கொரியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் கடுப்பான வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தென் கொரியாவுடனான அனைத்து வர்த்தக, அரசியல் தொடர்புகளையும் துண்டித்துள்ளார். சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் சென்ற கிம் ஜாங் அன் அங்குள்ள ராணுவ தளபதிகள், வீரர்களை சந்தித்தபோது தென்கொரியா மீது போர் தொடுக்க தயாராக இருக்கும்படி கூறியதாகவும், தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, தூதரக உறவைத் தொடரவோ விருப்பம் இல்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் தென்கொரியா ஈடுபட்டால் அழித்து நிர்மூலமாக்கிவிடுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் தென்கொரியா மீது எந்த நேரத்திலும் போர் தொடங்குவதற்கான அதிகாரத்தை ராணுவம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – ஹமாஸ் என பல பகுதிகளிலும் போர் நடந்து வருகிறது. தற்போது வடகொரியா – தென்கொரியா போர் தொடங்கி விடுமோ என உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன.