9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

Filed under: விளையாட்டு |

india_australia_odi2_014அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி அதிவேக சதம் கடக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

இரண்டாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் குவித்தது.

அரைசதம் கடந்து ஆரோன் பின்ச் 50 ஓட்டங்களும், வாட்சன் 59 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 53 ஓட்டங்களும், ஹியுஸ் 83 ஓட்டங்களும், அணி்தலைவர் பெய்லி 92 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் வினய் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி தொடக்கம் கொடுத்தது. மெக்கே ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபுறம், வாட்சன் பந்துவீச்சில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார்.

மறுபுறம், தோகர்டி ஓவரில் தவான் இரண்டு பவுண்டரி அடித்தார். பின் வந்த ஜான்சன் பந்துவீச்சிலும் இவர் இரண்டு பவுண்டரி விளாசிய தவான் 95 ஓட்டங்களில் பால்க்னர் பந்தில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை பறிகொடுத்தார்.

பால்க்னர் ஓவரில் கோஹ்லி தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். ஜான்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சதம் கடந்தார். வாட்சன் ஓவரிலும் அதிரடி காட்டிய கோஹ்லி மீண்டும் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார்.

மேக்ஸ்வெல் ஓவரிலும் வெளுத்து வாங்கிய கோஹ்லி சதம் கடந்தார். இதன் மூலம், ஒரு நாள் போட்டியில் (52 பந்து) அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களில் முதலிடத்தை பெற்றார்.

தன் பங்கிற்கு மேக்ஸ்வெல் ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 43.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் சதம் கடந்து ரோகித் சர்மா 141 ஓட்டங்களும், கோஹ்லி 100 ஓட்டங்களும் எடுத்தனர்.