விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்!

நேற்று இரவு 7 மணிக்கு நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் ஜோதிமணி மற்றும் பாஜகவின் கரு நாகராஜன் ஆகியோருக்கு இடையிலான வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் கலந்து கொள்பவர்கள் உணர்ச்சி ஆவேசத்தில் பேசி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் நேற்று நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் இதுபோன்ற வாக்குவாதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விவாதத்தில் ஜோதிமணியோடு திமுகவைச் சேர்ந்த எம்பி கலாநிதி மற்றும் பாஜகவின் கரு நாகரான் ஆகியோர் கலந்துகொண்டார். விவாதத்தின் ஜோதிமணி மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து பேச கருநாகராஜன் அவருக்குப் பதிலளிக்கும் போது ஒருமையில் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி அந்த விவாதத்தில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு ஆதரவாக கலாநிதியும் வெளியேறினார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ஜோதிமணிக்கு ஆதரவாக கருநாகராஜனுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ்ஸின் கூட்டணிக் கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கரு நாகராஜனுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இது சம்மந்தமாக ஜோதிமணி ‘இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.