இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரவு 10.30 மணிக்கு பின் வந்துள்ளார். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதையடுத்து அப்பகுதியில் இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காவல் துறையினரிடம் புகாரளித்தனர். இப்புகாரின்பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் விதிகளை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை நிராகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.