உலகின் மிகவும் பிரசித்திப்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் அச்சுறுத்தலால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பக்தர்கள் அமர்நாத் கோவிலுக்கு யாத்திரைக்கு சென்றனர். ஆனால் திடீரென மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழை காரணமாக சுமார் 40 பேரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்கக்கூடும் என கூறப்படுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.