சண்டைக்காட்சி ஒன்று ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடித்துக் கொண்டிருந்த அமிதாப்பச்சனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் “ப்ராஜெக்ட் கே.” படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அதில் அமிதாப் பச்சன் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அமிதாப்பச்சன் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வலது விலா எலும்பில் முறிவும், தசை நார்கள் கிழிந்துள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் படப்பிடிப்பில் நடந்த விபத்து பற்றி குறிப்பிட்டுள்ளதோடு, தான் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவேன் என்றும், வலிக்கு சில மருந்துகளை பயன்படுத்துவதாகவும், எனினும் நலமாகவே உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.