அமைச்சர் உதயநிதி அமித்ஷாவுக்கு எழுப்பிய கேள்வி

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் திமுக வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் அமித்ஷா, “வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பேசிய அமைச்சர் உதயநிதி, “நான் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளேன். பிச்சிஐ செயலாளாராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தேர்வானது எப்படி? 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் மதிப்பு ரூ.75 லட்சமாக இருந்தது. தற்போது, இந்த நிறுவனத்தில் மதிப்பு ரூ.130 கோடியாக அதிகரித்தது எப்படி? அமித்ஷாவின் மகன் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்று சொல்ல முடியாமல், என்னைப் பற்றி பேசியிருக்கிறார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.