தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து கோயில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலை அனைத்தும் அகற்றப்படும். இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும்” என்று கூறியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து செல்லூர் ராஜூ, “அண்ணாமலை சொன்னதற்காக அறநிலைத்துறை கலைக்க முடியாது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அறநிலைத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் இயங்கி வருகிறது” என்று கூறினார். அதேபோல் அமைச்சர் சேகர்பாபு, “திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்று பாகுபாடு கிடையாது, பெரியார் சொன்ன நல்ல கொள்கைகளை ஏற்றுக் கொள்வோம் இந்து மதத்தில் உள்ள நல்ல கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வோம். பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்பதால் அண்ணாமலை கூறியதை பற்றி பெரிது படுத்த வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.