அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. ஆனால் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் இந்த ஆய்வுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய கோயிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோயில் சார்பாக தீட்சிதர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர், ‘சட்ட ரீதியான விதிமுறைகளை மேற்கொள் காட்டி, சட்டரீதியாக அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளுமாறு’ தெரிவித்தார்.
இது குறித்து தீட்சிதர்கள் சார்பில் பேட்டியளித்த வழக்கறிஞர் சந்திரசேகர், “1959 சட்டத்தின் 107வது பிரிவின் வெளிச்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நீதித்துறை உத்தரவுகளுடன் படித்தால் அறநிலைத்துறை அல்லது அதன் அதிகாரிகளுக்கு தானாகவே பதிவுகளை அழைக்கவும் அல்லது ஆய்வு செய்யவோ அத்தகைய அதிகார வரம்பு இல்லை. இந்து சமய கோயில் விருப்பப்படி, எங்கள் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து கணக்குகளையும் மற்ற பதிவுகளையும் நாங்கள் பராமரிக்கிறோம். தணிக்கையின் அதிகார வரம்பை கொண்ட செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குதல், எங்கள் நோக்கமாக உள்ளது” என தெரிவித்தார்
இந்து அறநிலையத்துறை விசாரணைக்குழு, ‘இது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் இன்னும் ஆய்வு முடியவில்லை, ஆய்வு முடிந்த பிறகு விவரங்களை தெரிவிப்போம் என்றனர். ஆய்வுக் குழுவில், விசாரணை குழு ஒருங்கிணைப்பாளராக, ஆலய நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையர்சி.ஜோதி உள்ளார். பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



