ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறைப்பறவையாக மாறிய பெண் போலீஸ்.!

Filed under: தமிழகம் |

கோவை, ஜூன் 13

கோவை மாநகர காவல் துறையில் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுஜா என்பவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சுமார் 61 பவுன் நகைகளை சுவாக செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்பு போலீஸ் கஸ்டடிக்கு வந்த பெண் போலீஸ் சுஜா பல திடுக்கிடும் தகவல்களை விசாரணை காவல் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதே, நேரத்தில் பெண் காவலர் சுஜாவை பற்றி நம்மிடத்தில் சில காவல்துறை நண்பர்கள் பேசும்போது… கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சுஜா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது வாழ்க்கையை தன்னை தானே கெடுத்தது உடன் இன்று சிறை பறவையாக இருக்கிறார். கடந்த 2000 ஆண்டில் காவல்துறை பணிக்கு வந்த சுஜா 2008 முதல் 2009 வரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வரவேற்பு பிரிவில் பணிபுரிந்து வந்தார். பின்பு, சக போலீஸ்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சென்று கொண்டிருந்த இந்த காதல் தம்பதியினரின் அடையாளச் சின்னமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு சுஜா பந்தய சாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்தார். என்ன தான் பட்டினத்து வாழ்க்கை பணக்கார தோரணை என்றாலும், சுஜா தனது காவல் டூட்டி முடித்தவுடன் பிரபல ஜவுளி கடைகளுக்கு சென்று வித விதமான உயர் ரக ஆடைகளை தேர்வு செய்து வாங்கி அணிவதில் அவருக்கு நிகர் அவர் தான் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் சுஜா உடன் பணியாற்றிய சில காவலர்கள். சுஜாவின் ஆடம்பரம் நடவடிக்கையை கண்ட அவரது கணவர் சுஜாவை பல தடவை கண்டித்தார். ஆனால், சுஜாதா தான் தோன்றித்தனமாக செயல்பட ஆரம்பித்தாராம். இதனால் கணவருக்கும் சுஜாவும் பல தடவை கருத்துமோதல்கள் வந்தன. பின்பு, சுஜாதாவின் கணவர் நீதிமன்றத்தின் மூலமாக விவகாரத்து பெற்று சுஜா விற்கு பெரிய கும்பிடு போட்டு தென்மாவட்ட பகுதிக்கு இடம் மாறுதல் வாங்கி சென்று எளிமையான குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டாராம்.

பந்தய சாலை காவல் நிலையத்தில் சுஜா பணிபுரியும் போது அப்போதைய ஒரு காவல் உதவி ஆய்வாளரோடு ஊட்டி வரை உறவாகவும், தித்திக்கும் ரயில் பயணங்களாலும், பாசமலராகவும், ஒன்றுக்குள் ஒன்றாகி ரயில் பயணங்கள் முடிவதில்லை என்று எதிர்நீச்சல் போட்டு வந்தார்களாம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை போல் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பாகப்பிரிவினையாக மாறி விட்டார்களாம். அதன் பிறகு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும்போது பல முக்கிய வி.ஐ.பி.கள் தொடர்பு மூலம் சுஜா ஆடம்பர வாழ்க்கையின் உச்சிக்கே சென்றாராம்.

எப்போது பார்த்தாலும் பணம்… பணம்…. ஆடம்பர வாழ்க்கை, உயர்ரக ஆடைகள், என்று தினமும் வண்ண வண்ண கலர்களில் பட்டாம்பூச்சியாக வலம் வந்தாராம். இளம் கன்று பயமறியாது என்பது போல் கட்டுக்கடங்காமல் செயல்பட்டு வந்த சுஜா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சுமார்  12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 61 பவுன் நகைகளை தனது ஆடம்பர வாழ்க்கைக்காக அதை சுவாக செய்துவிட்டு நான் வண்டியில் செல்லும்போது கீழே விழுந்துவிட்டது என்று பல பல்லவிகளை பாடிக்கொண்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் ரெக்கவரி செய்யப்பட்ட நகைகள் குறித்து விளக்கம் தருமாறு சுஜாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைப்பார்த்த சுஜா என்ன செய்வதென்று தெரியாமல், என்ன பதில் சொல்வது.? என்று கதிகலங்கிய சுஜா லாங் லீவ் போட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

சுஜாவின் மோசடிகளை தெரிந்துகொண்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவகுமார் சுஜாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்க வேண்டிய ஸ்வப்னா சுஜா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் வாழ்க்கையை இழந்து இன்று சிறைச்சாலைகளில் இருப்பது கவலை அளிக்கிறது என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் நேர்மையாக பணி புரியும் சில காவலர்கள்.