பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் இதுகுறித்து டுவிட்டரில் “இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை. அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல சாதனைகளை செய்து இருக்கிறார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமின்றி விளையாட்டு வீராங்கணை பிடி உஷா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நியமன எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
உலகநாயகனின் டுவீட் : “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” என உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இசைஞானி நன்றி டுவீட்: “என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கவுரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி.” என பதிவிட்டுள்ளார்.