இசைஞானியின் எம்.பி. பதவி ஏற்பு!

Filed under: இந்தியா |

இசைஞானி இளையராஜா எம்.பி. ஆக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். “இளையராஜா எனும் நான்” – ‘கடவுளின் பெயரால்’ எனக்கூறி எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்தபோது இசைஞானி இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக முன்மொழிந்தார்.
இதில் இளையராஜா அல்லாமல் மற்ற மூவரும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால், இளையராஜா அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் அவர் முதல் நாள் நிகழ்வில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வரவில்லை.

தற்போது குடியரசு தலைவராக திரவுபதி முர்மூ இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.இரு அவை உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் முடிவில் உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையும் மக்களவையும் பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போது இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னையை எழுப்ப எதிர்கட்சிகள் ஆயத்தமாகின. நாடாளுமன்ற விதிகளின்படி புதிய உறுப்பினராக ஒருவர் பதவியேற்கும்போது அவைக்குள் எவ்வித கூச்சலோ குழப்பமோ இருக்கக் கூடாது. அவ்வகையில், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் தலைமையில் கூடியது. அப்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதற்காக அவையின் மையப் பகுதியை நோக்கி வர முயன்றனர். ஆனால், புதிய உறுப்பினர் பதவியேற்பு நடைமுறை என மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்ததும் எதிர்கட்சி எம்.பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.

இதையடுத்து இளையராஜாவை பதவியேற்க வரும்படி மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் அழைப்பு விடுத்தார். அப்போது கையில் தமிழில் எழுதப்பட்ட காகிதத்துடன் வந்த இளையராஜா, தமது பதவிப்பிரமாணத்தை தமிழ் மொழியில் எடுத்துக் கொண்டார். அதன்படி, “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் ‘கடவுளின்’ பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்,” என்று இளையராஜா பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். நடைமுறைப்படி பதவியேற்பு ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டபோது உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அவரை வரவேற்றனர்.