கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு 11-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வீரம்’ படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அஜித் நடிப்பில் தயாராகும் 55-வது படம். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாகவும். அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் பலர் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு டான் மக்கர்தூர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், படக்குழு இது குறித்து எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று காலை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் சாய் பாபா கோவிலில் வைத்து நடைபெற்றது. இப்பூஜையில் அஜித் கலந்து கொள்ளவில்லை. 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.