பல வருடங்களாக குற்றப் பரம்பரையினர் பற்றிய கதையை எடுக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சித்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை போட்டு போஸ்டரும் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்று அப்போதும் அவரால் படமெடுக்க முடியவில்லை.
இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இது சம்மந்தமாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே கடுமையான மோதல் எழுந்தது. ஆனால் இப்போது இருவரும் சமாதானம் ஆகிவிட்டாலும், இருவருமே அந்த படத்தை இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் பாலா குற்றப் பரம்பரை படத்தை இயக்க நினைத்த போது, அதில் கமல்ஹாசனை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அதற்காக கமல்ஹாசனிடம் கதையை சொன்னதாகவும், ஆனால் ஏனோ பின்னர் அந்த கூட்டணி இணையாமல் வேறு நடிகர்களை பாலா தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.