விருதுநகர், ஜூன் 7
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவில், தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஆடி மாத கடைசி வெள்ளி, தை மாத கடைசி வெள்ளி, போன்ற விசேஷ நாட்களில் தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தங்களது குடும்பம் சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.
அப்போது, பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பொன் மற்றும் பணம், வெள்ளி பொருட்கள், தங்களது விளை நிலங்களில் விளைந்த பொருட்களை இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். இந்த கோவிலில் பூசாரிகளாக ராமர், கதிரேசன், ஹரிராம், ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பக்தர்கள் தரும் காணிக்கையை லவட்டிக் கொண்டு பங்கு பிரித்துக் கொண்டு வந்தார்களாம். பூசாரிகளின் கோல்மால் வேலைகள் அரசல்புரசலாக கோவில் உதவி ஆணையர் கருணாகரனுக்கு தெரியவந்தது. தெய்வத்திடம் பணிபுரிபவர்கள் சுத்தமாக இருங்கள் என்று பலமுறை அறிவுரை கூறியும் இந்தப் பூசாரிகள் கேட்கவில்லையாம். வழக்கப்படி தங்களது கைவரிசையை பக்தர்களிடம் காண்பித்த பூசாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். ராமர் கதிரேசன் ஹரிராம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ததால் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.