உதயநிதியிக்கு பிரமுகர்கள் வாழ்த்துகள்!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உதவி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரண்டு மடங்காக உயர்ப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். “திமுக இளைஞர் அணியின் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் பதவியேற்றபோது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது. விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் கொடுப்பேன்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், “தம்பி அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என வாழ்த்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, “உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்” என வாழ்த்தியுள்ளார்.

திமுக எம்பி கனிமொழி, “இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தமிழக அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்கும் திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளர் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்தியுள்ளார்.