எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் செயல்பட்டு வருகிறது. அதிமுக குறித்த வழக்குகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பக்கமே தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் இன்று திடீரென அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி, “உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தேன். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் போதைபொருள் சர்வசாதாரணமாக கிடைப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமித்ஷாவிடம் தான் கோரிக்கை வைத்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.