எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

Filed under: அரசியல் |

எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், முதன்முறையாக தேர்தலில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கியது ஆலந்தூர் தொகுதி. இது 1967-ல் பரங்கிமலை தொகுதியாக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் முதல்முறையாக 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கினார். அப்போது அவர், திமுக சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 27,674 வாக்குகளை கூடுதலாகப் பெற்று, முதல்முறையாக சட்டப்பேரவைக்கு அடியெடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், 61 .11 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். 1977-ம் ஆண்டு முதல் பரங்கிமலை என்பது ஆலந்தூர் என்று பெயர் மாற்றம் பெற்றது. 1977 மற்றும் 1980-களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர் கே.எம்.அப்துல் ரசாக் வெற்றிபெற்றார்.

ஆனால், இந்திரா காந்தி மற்றும் எம்ஜிஆர் அனுதாப அலை வீசிய 1984-ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றிவாகை சூடியது. 1989-ம் ஆண்டில் திமுக மீண்டும் வெற்றிபெற்ற நிலையில், அதன்பிறகு, 2006-ம் ஆண்டுவரை நான்கு தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகியவை மாறி மாறி வெற்றிபெற்றன.

இதில், 2001-ம் ஆண்டு தேர்தலில் இரண்டு பிரபலங்கள் களமிறங்கினர். ஒருவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், மற்றொருவர் அதிமுக-வின் பா.வளர்மதி. கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றிபெற்ற வளர்மதி, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தார்.

2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனிடம் வளர்மதி தோல்வியை தழுவினார். கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் தா.மோ.அன்பரசன் இடம்பிடித்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த தேமுதிக-வின் வேட்பாளராக களமிறங்கிய பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வெற்றிபெற்றார்.

திடீரென உடல்நிலையைக் காரணம்காட்டி, எம்எல்ஏ பதவியை பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்தார். இதனால், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் வெற்றிவாகை சூடினார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிட்டார். எனினும், திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் வெற்றிபெற்று எம்எல்ஏ-வானார்.