‘எலக்சன்’ திரைப்படம் மே 17ம் தேதி ரிலீஸ்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய்குமார், ‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கியவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இத்திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. மே மாதம் 17ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌