எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர்; ஸ்டாலின் வரவேற்பு!

Filed under: அரசியல் |

மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை, நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகநீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனை இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளிம்பு நிலையில் அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவ மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் மத்திய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன். 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நரிக்குறவர் உள்ளிட்ட மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் என்று சொல்லியிருந்தோம். சமூகநீதிக்காக – சமுதாயத்தை கை தூக்கி நிறுத்துவதற்காக அடுத்தடுத்து பொருளாதார உதவி நடவடிக்கைகளைத் திமுக அரசு எடுத்து வருகின்ற நேரத்தில் அவர்களுக்கு பழங்குடியின தகுதி வழங்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை -நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும். நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்க எனது தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.