கல்வித்துறை கடந்த ஒரு மாதத்திற்குள் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளது.
தேர்தல், பள்ளி பொதுத்தேர்வுகள் என பல பரபரப்பான செயல்பாடுகள் தொடர்ந்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை மார்ச் முதல் தேதியிலேயே தொடங்கியது. 2024-25ம் ஆண்டிற்கான கல்வியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் 5 வயது குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்ப்பது, கிராமங்கள்தோறும் பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தகுதியான வயதுடைய சிறுவர், சிறுமியரை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பது என கல்வித்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ஒரு மாதத்திற்குள் 3 லட்சம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி முதல் அதற்கான விண்ணப்பங்கள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.