ஓபிஎஸ் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவர் மீது கல்லை வீசியெறிந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் இன்று நடக்க இருந்த மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிலையில் நேற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது அந்த பகுதியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ஆவடி நாசர், அங்கு சேர் போடாததை கண்டு அங்குள்ளவர்களை ஒருமையில் திட்டியதுடன், கற்களையும் வீசி எறிந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே ரவுடி போல கற்களை வீசுவது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதன் அடையாளமாகவே தெரிகிறது என கூறியுள்ளார். மேலும் “திமுகவினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளால் தனது தூக்கமே போய்விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்விட்டு வருத்தப்பட்டு கூறியபோது அமைச்சர் ரவுடி போல செயல்படுவது முதல்வரின் வார்த்தையை அவர் பொருட்படுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் இந்நேரம் அவரது அமைச்சர் பதவி போயிருக்கும். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுப்பதை தவிர்த்து கடும் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என கூறியுள்ளார்.