கனடா பிரதமருடன் மோடி உரையாடல்!

Filed under: இந்தியா,உலகம் |

புது டெல்லி,  ஏப்ரல், 29

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக இன்று உலக அளவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய அளவில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, பொருட்கள் கிடைப்பதை தொடர்ந்து நிலைநிறுத்துவது, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

கனடா நாட்டில் தற்போது வசித்து வரும் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, அரசு அளித்து வரும் உதவி மற்றும் ஆதரவுக்காக கனடா பிரதமருக்கு மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள கனடா நாட்டு குடிமக்களுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை பிரதமர் ட்ரூடூ பாராட்டினார்.

மருந்துத் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் உற்பத்தித் திறன் கனடா மக்கள் உள்ளிட்ட, உலக மக்கள் அனைவருக்கும் இந்தியாவின் சிறப்பான திறனளவில் தொடர்ந்து உதவி புரிவதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி இத்தருணத்தில் உறுதியளித்தார்.

இந்த வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய போராட்டத்தில் இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டணி குறிப்பாக கொரோனா வைரஸிற்கான சிகிச்சை தீர்வுகள் அல்லது தடுப்பூசியை கண்டறியும் நோக்கத்துடன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பின் மூலம் அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதாக அமையும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.