கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தபின் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறினார்.