கமல்ஹாசனின் வலைபதிவு!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரை போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்.

அப்பதிவில் அவர், “வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி. 1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் பயிற்றுவிக்கப்பட்ட 79 போராட்ட வீரர்களுடன் காந்தியார் தொடங்கிய யாத்திரை இந்திய விடுதலை வரலாற்றின் மாபெரும் திருப்புமுனைகளுள் ஒன்றாக அமைந்தது. பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து புண்ணான கால்களுடன் 61 வயது முதியவர் தண்டி கடற்கரையில் குனிந்து ஒரு பிடி உப்பை அள்ளி தன் கரங்களை வான் நோக்கி உயர்த்திச் சொன்னார் ‘நம் கையில் இருப்பது வெறும் உப்பு அல்ல. இது இந்தியாவின் கௌரவம். நமது கரங்கள் தாளாதிருக்கட்டும்’ ஆம் பெரியவரே நீங்கள் தந்து சென்றிருக்கும் அஹிம்சை எனும் ஆக சக்தி வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தின் மானம் காப்போம் நாங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.