“மஞ்சும்மள் பாய்ஸ்” மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய பெற்றி பெற்றுள்ளது. படத்தின் உண்மை சம்பவத்தில் இருந்தவர்கள் கமல்ஹாசனை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
2006ல் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சென்ற மலையாள இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த பெரும் பள்ளம் ஒன்றில் விழுந்து விட அவர்களது நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றினார்கள் என்ற உண்மைக் கதையை மையப்படுத்தி வெளியான படம் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. கேரளா, தமிழ்நாடு முழுவதும் ஹிட் அடித்துள்ள இந்த படம் கேரளாவில் டாப் ஸ்டார் படங்களுக்கு இணையாக 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இப்படத்திற்கு பிறகு கொடைக்கானலில் குணா குகைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருந்தார். இந்நிலையில் உண்மையாக அந்த பள்ளத்தில் சிக்கிய சுபாஷையும், அவரை மீட்ட ஷிஜூவையும் பல சேனல்கள் பேட்டி எடுத்து வருகின்றன. அப்படியாக ஒரு பேட்டியில் பேசிய நிஜ வாழ்க்கையின் மஞ்சும்மள் பாய்ஸ் தாங்களும் கமல்ஹாசனை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள் “சின்ன வயசுல இருந்தே நாங்க தீவிர கமல் ரசிகர்கள். கமல் சாரின் “குணா” படத்தை பார்த்த பிறகுதான் குணா குகைக்கு சென்றே ஆக வேண்டும் என மிகவும் ஆசையோடு அங்கே சென்றோம். சமீபத்தில் படக்குழுவினரை கமல் சார் நேரில் அழைத்து வாழ்த்தி இருந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோல எங்களுக்கும் ஒருமுறை அவரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவோம்” என ஆசையை சொல்லியுள்ளனர். படக்குழுவினரை அழைத்து பாராட்டிய கமல்ஹாசன், தனது தீவிர ரசிகர்களான உண்மையான மஞ்சும்மள் பாய்ஸ் நண்பர்களை சந்திப்பாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.