தன்னிடம் இருந்து அனுமதி பெறாமல் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 ஏடி” படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிவுட் கிராபிக் ஆர்டிஸ்ட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிரபாஸ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் படம் “கல்கி 2898 ஏடி.” படத்தில் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார், கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் எதிர்காலத்தில் நடப்பதான கதைகளத்தை கொண்டு கல்கி அவதாரத்தின் வருகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெயிலர் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் வெளியானது. அப்போதே டிரெயிலரை பார்த்த பலரும் அதில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் பிரபல ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ், மேட் மேக்ஸ் போன்றவற்றை நினைவுப்படுத்துவதாக கூறி வந்தனர். தற்போது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு கிராபிக் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரியும் சங் சோய் என்பவர் “கல்கி” படத்தில் தன்னுடைய கிராபிக்ஸ் டிசைன்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில் 10 வருடங்களுக்கு முன் தான் தயாரித்த கிராபிக் டிசைனையும், அது அப்படியே “கல்கி” படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் “அனுமதி இல்லாமல் மற்றவரது படைப்பை பயன்படுத்துவது சரியான செயல் கிடையாது. இப்படி சட்டத்திட்டங்களை மதிக்காமல் ஒரு கலை படைப்பை உருவாக்கதான் வேண்டுமா?” என கேள்வி எழுப்பியிருந்தார். பின்னர் அதை எடிட் செய்து வெறுமனே கல்கி படக்குழு, தயாரிப்பு நிறுவனத்தை மட்டும் டேக் செய்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.