கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வருவாய் இழந்து வாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளன. பெற்றோரின் நிலைமையை புரிந்து கொள்ளாத தனியார் பள்ளிகள் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து வகையான தொழில்களும், வணிகமும் முழுமையாக முடங்கி விட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் வருவாய் இல்லாமல் வாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை களைவதற்காக, பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக்கொண்டவாறு, அனைத்து வகையான கடன்களின் மாதத் தவணைகளை அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
அதேபோல், பள்ளிகளின் கல்விக்கட்டணத்தையும் அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அதையேற்று கல்விக்கட்டணங்களை வசூலிப்பதை தனியார் பள்ளிகள் ஒத்திவைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அதை பொருட்படுத்தாத தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்சேதி மூலமாக தகவல் தெரிவித்துள்ளன. குறித்த காலத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்தத் தவறும் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப் படுவார்கள் என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன. இது ஏற்கக்கொள்ள முடியாதது ஆகும்.
அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஒரு சில பிரிவினரை தவிர மற்ற பிரிவினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களால் மாதக் கடன் தவணைகளை செலுத்த முடியாது என்பதை உணர்ந்ததால் தான், அவற்றை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது. மாதக் கடன் தவணைகளுடன் ஒப்பிடும் போது பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் மிக அதிகமாகும். சில பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் பெரும்பான்மையான பெற்றோர் கல்விக்கட்டணம் செலுத்தும் நிலையில் இல்லை.
இதை உணராமல் கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்துங்கள் அல்லது குழந்தைகளை நீக்கி விடுவோம் என்று தனியார் பள்ளிகள் அச்சுறுத்துவதை அரசு அனுமதிக்கக்கூடாது. அதுவும், அடுத்த கல்வியாண்டு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் நிலையில், அதற்கான கட்டணத்தை இப்போதே செலுத்தும்படி கூறுவது மனித நேயமற்ற செயலாகும். எனவே, பள்ளிகள் தொடங்கி, முதலாம் பருவம் முடிவடையும் வரை தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதையும் மீறி ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால், அந்த பள்ளிகளை அரசாங்கமே கையகப்படுத்தி நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
– பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை