தமிழசை சவுந்தரராஜன் தமிழகத்தில் கல்வி கருணாநிதிமயம் ஆகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று குடியாத்தம் அத்தி யோகா இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தனை பார்க்க மகள் தமிழிசை வந்தார். காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை, “வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயண நேரமும் மிச்சமாகிறது. நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலிலேயே பாஜ ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைத்து விடும். இருந்தாலும், மக்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருகிறார். தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரிநீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்காக தமிழக அரசு இதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. திமுகவும் கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காவிரிநீர் கொண்டு வருவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.
எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது காவிரி நீருக்காக பெரிய அளவில் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் அவர் போராட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், காவிரி நீர் கொண்டு வர அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளையும் அவர் மூடவில்லை. எல்லா விதத்திலும் தமிழக அரசு தோல்வியடைந்து வருகிறது. கருணாநிதி பற்றி 9ம், 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் பாடங்கள் இடம்பெற்றிருந்தன. இப்போது 8ம் வகுப்பு புத்தகத்திலும் கருணாநிதி பாடம் இடம்பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தில் கல்வி என்பது கருணாநிதி மயமாக்கப்பட்டு வருகிறது. எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றிய தகவல்களும் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். பள்ளிப் புத்தகங்களில் தலைவர்கள் குறித்த பாடம் இடம்பெறுவது தொடர்பாக, தெளிவான வழிகாட்டு முறை இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.