வியாபாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் சென்னையில் மரணமடைந்த வழக்கு குறித்த விசாரணையில் அது விபத்து அல்ல கொலை என்று தெரிய வந்துள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 37 வயதான பிரேம்குமார் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சன்பிரியா. நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அந்த பகுதியில் கார் விபத்து ஏற்படுத்திய அரிகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். அந்த காரை மொபைல் ஆப் மூலம் சில நாட்கள் முன்னர்தான் ஹரிகிருஷ்ணன் வாங்கியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரித்ததில் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது. அயனாவரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணனும், பிரேம்குமார் மனைவி சன்பிரியாவும் கடந்த பல காலமாக ரகசிய உறவில் இருந்து வந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து அவர்கள் உல்லாசமாக இருந்து வந்த நிலையில் இது பிரேம்குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் தனது மனைவியை கண்டித்ததோடு, ஹரிகிருஷ்ணனையும் கண்டித்துள்ளார். பிரேம்குமார் இடையூறால் தாங்கள் நெருங்கி பழக முடியாததால் இருவரும் பிரேம்குமாரை கொல்வது என திட்டமிட்டுள்ளனர். இதற்காக மொபைல் ஆப் மூலம் பழைய காரை வாங்கிய ஹரிகிருஷ்ணன் தன் நண்பர் ஒருவரோடு சென்று ஆளி இல்லாத சாலையில் பிரேம்குமார் மீது காரை மோதிக் கொன்று விபத்து போல செட் செய்துள்ளார். இந்த உண்மை தெரிய வந்துள்ள நிலையில் இறந்த பிரேம்குமாரின் மனைவி சன்பிரியாவும், அவரது ரகசிய காதலன் ஹரிகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரிகிருஷ்ணனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.