சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கல்வராயன் மலை பகுதிகளில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் துணையோடு கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக செய்திகள் வெளி வருகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சாராய விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போது அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது என்றும் இதற்கு யார் பொறுப்பு என்றும் இது தொடர்பாக, வரும் 26ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.