காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டில்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு விளக்கமளித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு விஜயதாரணி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அதேசமயம், பாஜகவில் இன்று இணைய வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளதால், வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் அவர் சேரலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.