சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட 56 அடி உயர முருகன் சிலை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மலேசியாவில் இருக்கும் முருகன் கோவில் போல் தமிழகத்தில் பல பகுதிகளில் சிலை அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வரை சிரித்த இதழோடு அழகிய முருகனை கண்டிருப்போம். ஆனால் அந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையோ உடல் வற்றி, முகம் ஒட்டி, புன்னகையற்ற தோற்றத்தில் காணப்படுகிறது. கடவுள் சிலைகள் செய்வதற்கென்றே காலம்காலமாக பல விதிமுறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அழகாக சிலை செய்யும் பல ஸ்தபதிகளும் உள்ளனர். ஆனால் இந்த சிலை அமைப்பு எதுவுமின்றி பொம்மை போல இருக்கும் இந்த முருகன் சிலை தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.