டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இத்தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்த இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்ற 25 வயது இளைஞர் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். அவர் அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என மன வருத்தத்தில் புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் திடீரென விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்ததை குடித்த நிலையில் அவரது வாயில் நுரை தள்ளியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.