வாஷிங்டன், செப் 25:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பின், குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நேற்று நடந்தது. அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த அந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.
கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வது குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோகிஷைட் சூகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், இந்தோ பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாநாட்டை தொடர்ந்து, வாஷிங்டனில் இருந்து நியூயார்க்கிற்கு விமானத்தில் புறப்பட்டார். நியூயார்க்கில் நாளை நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வில் பங்கேற்று, அவர் உரையாற்ற உள்ளார்.