கூட்டத்தை முடித்துவிட்டு.. விறுவிறுவென கிளம்பி சென்ற ஸ்டாலின்.. திமுக வைத்த குறி இன்று கிளைமேக்ஸ்!
சென்னை: நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய சந்தோசத்தில் திமுக தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.. இப்படிப்பட்ட நிலையில் இன்றே திமுக மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து முழுமையான கூட்டணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் நேற்று திமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலை 11 மணிக்கே இந்த மாநாடு தொடங்கிவிட்டது.
திமுக தலைவர்கள் மட்டுமின்றி திமுக சாராத பலதுறை வல்லுனர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்குத் திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டார்.
அடுத்த கட்டம்
இந்த நிலையில் இந்த மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில் திமுக அடுத்த கட்டத்திற்கு தயாராகி உள்ளது. அதன்படி இன்றே மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, திமுகவின் கூட்டணிக்கு முழு வடிவத்தை கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இன்று சென்னையில் திமுக சார்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். இன்று சென்னையில் ஸ்டாலின் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.
எப்படி
திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. நாளைக்குள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டும். இதனால் இன்றே எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும் என்று திமுக முடிவு செய்ய உள்ளது. காங்., விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
திமுக கூட்டணியில் காங். 25, விசிக 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மதிமுக 6, முஸ்லிம் லீக் 3, மமக 2 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று கூட்டணி உடன்படிக்கை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. திமுக குறைந்தபட்சம் 175 இடங்களில் போட்டியிடும் என்கிறார்கள். இதற்கான இறுதி ஆலோசனை இன்று நடக்க உள்ளது.
ஆலோசனை
இதன் மூலம் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று கிளைமேக்ஸை எட்ட உள்ளது என்று கூறுகிறார்கள். மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை இன்று திமுக முடித்துவிட்டு, அடுத்தகட்ட தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கிவிடும். நேர்காணல் செய்யப்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.