‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு மீண்டும் சிம்புவை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்துக்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சிம்பு, பல்லவி சுபாஷ், விடிவி கணேஷ் நடிப்பில் ‘சட்டென்று மாறுது’ என்ற தலைப்பில் படம் உருவாகி வந்தது.
அந்த நிலையில், அஜித்தின் கால்ஷீட் கிடைத்ததும், ‘என்னை அறிந்தால்’ படம் உருவானது. பிப்ரவரி 5-ல் வெளியான இப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது சிம்பு படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் கௌதம் மேனன்.
‘சட்டென்று மாறுது வானிலை’ என்று வைக்கப்பட்ட தலைப்பு ஏற்கெனவே சினிமா துறையில் இருப்பவரால் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ‘அச்சம் என்பது மடமையடா’ என தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தாமரையும், மதன் கார்க்கியும் பாடல்களை எழுதுகின்றனர்.