இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அரிதாரம் பூசிய வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து விட்டார்.
தனது ரீ-என்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பாத்து பாத்து கவனமாக நடித்துள்ளாராம். ஏற்கனவே தான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை விடவும் இப்படம் பெரிய வசூல் சாதனை புரியும் என்று முழு திருப்தியில் இருக்கிறாராம் வடிவேலு.
ஆனால், இதுவரை தெனாலிராமன் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவது பற்றி யோசிக்காமல இருந்தவர்கள், இப்போது பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெளியாவதாக இருந்த ரஜினியின் கோச்சடையான் பின்வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதால், அந்த படத்துக்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
ஏறகனவே விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் வெளியாவது உறுதியாகி விட்டபோதிலும், கதை மீதும், தனது நடிப்பின் மீதும் உள்ள நம்பிக்கையில் துணிந்து களமிறங்குகிறாராம் வடிவேலு. அதனால் முதல்கட்டமாக முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே விஜய்,அஜீத் படங்களை வெளியிடுபவர்களும் கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்களை தங்கள் பக்கம் இழுக்கும் அதிரடி முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.