கோவில் தொடர்பான வழக்கிற்கு நீதிமன்றம் காட்டம்!

Filed under: தமிழகம் |

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என்று கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் முத்தாலம்மன் மாரியம்மன் கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க கோரி, பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது. இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை. கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது. இவ்வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த வேண்டும். இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது” என நீதிபதி தெரிவித்தார்.