ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்
கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த ஷர்மிளாதான்.
இவர் பேருந்தை அனாயசமாக வளைத்து ஓட்டுவதில் வல்லவர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது. இதுபற்றி ஷர்மிளா கூறும்போது, “எனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்ததேன். தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கேன். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளேன். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும். டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள், ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது. ஏழாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டிலும், உனக்கு எதில் விருப்பமோ அதை செய் என கூறிவிட்டாதால் கனவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இப்போதான் பேருந்தை கையில் எடுத்திருக்கிறேன், ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம். நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன் என்று கூறினார். ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசினாலும், இந்த காக்கி சட்டையை போட்டதுக்குப் பிறகு முடியாததுன்னு எதுவுமே இல்லை. பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கிவிட்டேன்” என்கிறார் ஷர்மிளா. ஷர்மிளாவுக்கு கல்லூரி மாணவர்கள் முதல் பொதுமக்கள் எனன அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.