கோவை போலீசார் சொந்த காரில் டிரைவிங் செய்து வரும் நபர்களுக்கு டிரைவர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று மதுபான கடைகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே. சொந்த கார் வைத்திருக்கும் நபர் மதுபான கூடத்திற்கு வந்தால் அவர் மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது மதுபான நிர்வாகம் தான் அந்த நபருக்கு டிரைவர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த நபரை அவருடைய காரிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட வேண்டும் என்றும் கோவை போலீசார் அறிவித்துள்ளனர். நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுனர்களை மதுபானக்கூடம் ஏற்பாடு செய்து மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற காவல் துறையின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கும் இதே வசதி உண்டா என்ற கேள்வியை நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.