கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!

Filed under: தமிழகம் |

கோவை, ஜூன்  11

தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருமண்டல பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சுகளில் சுமார் 175 பாதிரியார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தலைமை பேராயராக இருப்பவர் திமோத்தி ரவீந்தர்.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோட்டில் குமார் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. பவுல் சர்ச்சில் செயலாளராகவும், பில்டிங் கமிட்டி கன்வீனர், எக்ஸிக்யூட்டி கமிட்டி மெம்பர் ஆக இருந்தவர் ஜெபரூபன் ஜான்சன் என்பவர். தனது பதவி அதிகாரத்தை வைத்து சர்ச் நிர்வாகத்தில் சுமார் 15 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துவிட்டதாக சி.எஸ்.ஐ. சர்ச் மெம்பராக இருக்கும் திலீப்குமார் என்பவர், இந்த ஊழல் குற்றச்சாட்டை முதன்முதலாக வெளி உலகிற்கு கொண்டு வந்தார். இதனால் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்திலுள்ள கர்த்தரின் விசுவாசிகள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர். பின்பு, இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பூதாகரமாக பேசப்பட்டது. ஆனால், தலைமை பேராயர் திமோத்தி ரவீந்தரோ இந்த ஊழல் குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் அதை கிடப்பில் போட்டுவிட்டார்.

பின்பு, திருமண்டலத்தில் உள்ள சர்ச்சுகளில் பணிபுரியும் சில நேர்மையான பாதிரியார்களின் கடும் முயற்சியின் காரணமாக மறுபடியும் பேராயர் திமோத்தி ரவிந்தர் கிடப்பில் போடப்பட்ட இந்த ஊழல் குற்றச்சாட்டு புகார் மனுக்களை விசாரிக்க தொடங்கினார். விசாரணை கமிஷனும் அமைத்தார். அதில், திருச்சபையை சேர்ந்த சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஒருவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், தொழில் நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், என்று மூன்று பேர் கொண்ட விசாரணை கமிட்டியை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்த விசாரணை கமிஷன் திருப்பூர் சி.எஸ்.ஐ. பால் சர்ச் முன்னாள் செயலாளரான ஜெபரூபன் ஜான்சன் மீது வந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு புகார் மனுக்களை அலசி ஆராய்ந்து கடந்த ஒரு வருட காலமாக விசாரணை செய்து ஊழல் நடைபெற்றது உண்மைதான் என்று தெரியவர, உடனே 130 பக்கத்தில் ஊழல் நடைபெற்றது உண்மை என்று தங்களது விசாரணை அறிக்கையை பேராயர் திமோத்தி ரவீந்தரிடம் சமர்ப்பித்தார்கள். இதைப்பார்த்த பேராயர் திடுக்கிட்டார், உடனே என்ன செய்வதென்று புரியாமல் யோசனை செய்த பேராயர் திருப்பூர் சி.எஸ்.ஐ. சர்ச்சில் நடைபெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெபரூபன் ஜான்சனுக்கு பெயரளவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதற்கு ஜெரூபன் தரப்பில் உப்புச்சப்பில்லாத காரணத்தை கூறி பதில் அனுப்பினாராம். பேராயர் அனுப்பிய ஷோகாஸ் நோட்டீஸ் விவகாரம் சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார்களுக்கு தெரியவர, கொந்தளித்தனர். இந்த விவகாரம் விசாரணை கமிஷன் செய்த நபர்களுக்கும் தெரியவர உடனே அவர்களும் பேராயரை தொடர்பு கொண்டு மறுபடியும் ஒரு தெளிவான ஷோகாஸ் நோட்டீஸ் கொடுக்கச் சொன்னார்கள். வேண்டாவெறுப்பாக மறுபடியும் கையெழுத்து போட்டு நோட்டீஸ் அனுப்பினார் பேராயர் திமோத்தி ரவீந்தர். ஆனால் பேராயரின் ஷோகாஸ் நோட்டீஸ்க்கு எந்தவித பதிலும் தராமல் கிடப்பில் போட்டு விட்டார் ஜெபரூபன் என்று நம்மிடத்தில் கூறுகிறார் பாதிரியார் ஒருவர்.

இதற்கிடையில், திருப்பூர் குமார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. பவுல் சர்ச் ஊழல் குற்றச்சாட்டை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திலிப் குமார் என்பவர் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் அப்போதைய திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துமாலை என்பவர் புகாரில் உண்மை தன்மை இருப்பதைக்கண்டு உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். ஆனால், இந்த விவகாரம் ஜெபரூபன் ஜான்சனுக்கு தெரியவர ஆய்வாளர் முத்துமாலையை தொடர்புகொண்டு பேச வேண்டியதை பேசி கொடுக்கவேண்டிய கரன்சியை கொடுத்து அந்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து சி.எஸ்.ஐ. கர்த்தரின் விசுவாசிகளை ஆச்சரியப்படுத்தி விட்டார் என்று பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் காக்கிச்சட்டை ஒருவர் நம்மிடத்தில் இத்தகவலை கூறுகிறார்.முதல் தகவல் அறிக்கை ரத்து செய்த விவகாரம் சி.எஸ்.ஐ. மெம்பர் திலீப்குமாருக்கு தெரியவர, உடனே அவர் திருப்பூர் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றுவரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. பால் சர்ச்சில் ஏராளமான ஆட்களை சேர்த்து கொண்டு கூட்டு வழிபாடு செய்ததாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் சர்ச்சின் பாதிரியாரான வில்சன் குமார் மீது வழக்கு பதிவு செய்து காவல்நிலைய குற்ற எண் 1391 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 269 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தற்போது பாதிரியார் வில்சன் குமார் மீது காவல்துறையினரால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, நான் ரத்து செய்து தருகிறேன். அதற்கு கைமாறாக என் மீது போடப்பட்ட பல கோடி ரூபாய் மோசடி புகார் மனுவை நீங்கள் ( வில்சன் குமார் ) எனக்கு திருச்சபையில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் பேசி அதை கேன்சல் செய்ய வேண்டும் என்று ஜெபரூபன் ஜான்சன் ரகசியமாகப் பேசிக் கொண்டு வருகிறாராம்.
இந்நிலையில், 2/6/2020 அன்று நம்மை தொடர்பு கொண்ட திருப்பூர் சி.எஸ்.ஐ. பால் சர்ச் பாதிரியார் வில்சன் குமார், ஐயா நான் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் சாவகாசம் எனக்கு பிடிக்காது, நான் பிள்ளை குட்டிக்காரன் என்னை விட்டு விடுங்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நம்மிடம் கூப்பாடு போட்டார். நீங்கள் மனம் திருந்திய பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்!