நடிகை சமந்தாவை கடந்த சில ஆண்களுக்கு முன்பு தோல்நோய் தாக்கியது. அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் நடிப்பது அவருக்கு அலர்ஜியாக இருந்தது. உடம்பு முழுவதும் சிவப்பு கொப்பளங்கள் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். 6 மாதங்கள் வரை வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த காலகட்டத்தில் மணிரத்தினத்தின் கடல், ஷங்கரின் ஐ பட வாய்ப்புகளை இழந்தார். சமந்தாவுக்காக காத்திருந்தவர்கள் வேறு நடிகையை வைத்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் மனம் தளராத சமந்தா பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு அவர் நடித்த தெலுங்கு படங்கள் ஹிட்டானது. சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வருகிறார்கள். விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது என்கிற பேச்சும் உண்டு. இந்த நிலையில் மீண்டும் அவர் லிங்குசாமி தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கியது. 10 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் சமந்தாவை மீண்டும் தோல்நோய் தாக்கியது. முதலில் அவரது முகத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தது. பிறகு உடம்பில் சிவப்பு கொப்பளங்கள் தோன்றியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்பி விட்டனர். சமந்தா பூரண நலம்பெற இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்கிறார்கள். அதனால் அவர் இல்லாத காட்சிகளை அடுத்த வாரம் முதல் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். சமந்தா குணமானதும் அவரது உடல் நிலைக்கேற்ப காட்சிகளில் மாற்றம் செய்து படப்பிடிப்பை தொடர இருக்கிறார்கள்.