நடிகை சமந்தா சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்பொழுது “பேமிலி மேன்” இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் “சிட்டாடல்” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இப்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அடுததடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில்தான் முதல் முதலாக சமந்தா அறிமுகமானார். 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சமந்தாவுக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.