சிஏஏ தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்! முதலமைச்சர் அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது என்று அறிவித்துள்ளார்.

நேற்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது. சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இனம் மதம் ஆகியவற்றால் வேறுபட்டாலும் ஒன்றுபட்டு வாழும் இந்திய மக்களின் நலனுக்கு எதிரான சட்டம். சிஏஏ சட்டம் இந்திய தாய் திருநாட்டின் பன்முகத்தன்மை மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் எதிரானது. சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழ் தமிழர்கள் நலனுக்கும் எதிரானது. சிஏஏ போன்ற எந்த சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பது தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.