புது டெல்லி, ஏப்ரல், 24
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23/04/2020) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இரண்டு தலைவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பெருந்தொற்றுக்கு எதிராக தங்களது நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அத்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை எதிர்கொண்டு அதனைச் சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களை இருவரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
சிங்கப்பூருக்கு மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட இன்றியமையாத பொருட்கள் விநியோகத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மேலும் சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்குத் தேவையான உதவிகளையும் அளித்து வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் இந்தியா – சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையிலான திட்டம் சார்ந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். கோவிட்-19 ஏற்படுத்தி உள்ள தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை இரண்டு நாடுகளும் இணைந்து எதிர்கொண்டு செயலாற்ற அவர்கள் சம்மதித்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடி காலத்தில் சிங்கப்பூர் மக்கள் ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழ்வதற்கான தனது வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார்.