மிஷ்கின் டைரக்ட் செய்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சமீபத்தில் ரிலீசானது. இதனை மிஷ்கின் சொந்தமாக தயாரித்திருந்தார். படம் ரிலீசானபிறகு படத்தை மீடியாக்கள், மற்றும் இணையதள விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஆனால் இதனுடன் வெளிவந்த ராஜா ராணி காட்டில்தான் வசூல் மழை அடிக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் டல்லடித்துக் கிடக்கிறது. இதனால் நொந்து போன மிஷ்கின் என்னிடம் புரமோஷனுக்கு பணம் இல்லை என்று காட்டுவதற்காக அதிகாலை 3.30 மணிக்கு கோவையில், ரோட்டில் இறங்கி படத்தின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார். யாரப்பா இது நடு ராத்திரியில் கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு போஸ்டர் ஒட்டுறதுன்னு பார்த்த மக்கள் மிஷ்கினை அடையாளம் கண்டு பாராட்டி, ஆறுதலும், ‘நாளை படம் பார்க்கிறோம்’ என்ற உறுதியையும் சொல்லியிருக்கிறார்கள். கோவையை அடுத்து திருச்சி, சேலம், மதுரை நகரங்களில் போஸ்டர் ஒட்ட திட்டமிட்டிருக்கிறார்.
இந்த போஸ்டர் பயணத்தின் போது திடீர் தியேட்டர் விசிட் அடித்து படத்தின் மியூசிக் சி.டியை கொடுத்து மக்களிடம் நன்கொடை வசூலிக்கிறார். அந்த பணத்தை சென்னையில் உள்ள வசந்தம் மனநல வளர்ச்சி குறைந்த பள்ளிக்கு கொடுக்க இருக்கிறார்.