சிறுமி கொலை! புதுச்சேரியில் பதற்றம்!

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன் (40) மனைவி மைதிலி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது மாயமானார். இது தொடர்பாக அவரது பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார், குழந்தை மாயம் மற்றும் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனிடையே நேற்று மதியம் சிறுமி கை கால்கள் கட்டப்பட்டு வேஷ்டியில் சுற்றுப்பட்டு வாய்க்காலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை போலீசார் உடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிறுமியை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆசாரி விவேகானந்தன் (57), மற்றும் வாலிபர் கருனாஸ் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கருணாஸ் என்கிற வாலிபர், சிறுமிக்கு ஐஸ்கிரீம் கொடுத்து விவேகானந்தர் வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியிடம் பாலியல் முயற்சியில் ஈடுப்பட்ட போது அவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இருவரும் சிறுமியின் கை கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியால் சுற்றி முதியவர் வீட்டின் பின்புறம் உள்ள வாய்காலில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமி மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் பெண்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு, சிறுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களை கலைக்க போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.