திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவா, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வரும் ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி முதல் தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, பாமக வேட்பாளராக பாமக மாநில துணைத் தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா அறிவிக்கப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் பேரணியாக சென்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பொன்முடி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.