தான்சானியா நாட்டு தம்பதியருக்கு ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகள், சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
தான்சானியா நாட்டில் உள்ள தார் எஸ் சலாம் நகரை சேர்ந்தவர் ஜிம்மி இம்டெமி. இவரது மனைவி கரோலின் சக்கரியா. இவர்களுக்கு எட்டரை மாதங்களுக்கு முன்பு உடல் ஒட்டியபடி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுக்கு அப்ரியானா, அட்ரியானா என பெயர் வைத்து பெற்றோர் அழைத்து வந்தனர். இந்நிலையில் ஒட்டியுள்ள குழந்தைகளை பிரிப்பதற்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி பெற்றோர் வந்தனர்.
தோல் விரிவாக்கம்
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், கீழ் மார்பு முதல் அடி வயிறு தொப்புள் வரை குழந்தைகள் ஒட்டியபடி இருப்பது தெரியவந்தது. மேலும் இரண்டு குழந்தைகளின் இதயங்களை சுற்றியுள்ள சவ்வுகள் மற்றும் கல்லீரல்கள் ஒட்டி கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகளை பிரிப்பதற்கு வசதியாக தோல்களை விரிவாக்கம் செய்வதற்கான சிகிச்சை கடந்த செப்டம்பர் 10-ம் தேதி செய்யப்பட்டது.
11 மணி நேர அறுவை சிகிச்சை
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 17-ம் தேதி பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை துறை டாக்டர் கே.எஸ்.சிவகுமார் தலைமையில் இதயம், கல்லீரல், இரைப்பை மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் குழுவினர் இணைந்து சுமார் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஒட்டிப் பிறந்த குழந்தைகளை தனித்தனியாக வெற்றிகரமாக பிரித்தனர். இந்த ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பிரிப்பது, மருத்துவமனையில் 2 மாதமாக தங்கியது என ஒட்டு மொத்தமாக சுமார் ரூ.25 லட்சம் வரை செலவாகியுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆண் குழந்தைகள் பிரிப்பு
இதுதொடர்பாக டாக்டர் கே.எஸ்.சிவகுமார் கூறியதாவது: ஒட்டிப் பிறந்த குழந்தைகளின் இதயத்தை சுற்றி இருந்த சவ்வு முதலில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டது. அதன்பின் கல்லீரலை பிரித்தோம். மிகவும் போராடி குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்துள்ளோம். இதே போல கடந்த ஆண்டு தான்சானியா நாட்டை சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளை தனித்தனியாக பிரித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆப்ரிக்கா போன்ற வளரும் நாடுகளில் இத்தகைய சிக்கலான உயர் திறன்மிக்க சிகிச்சைகள் இல்லை. அதனால் அவர்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். இதற்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பதே முக்கிய காரணம் என்றும் குழந்தைகள் வெற்றிகரமாக தனித்தனியாக பிரிக்கப்பட்டதால், பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.